×

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவு; ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டம்.. தலைமைச் செயலாளர் பேட்டி..!!

சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து தலைமைச் செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

வரலாறு காணாத மழை பதிவு:

வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
வரலாறு காணாத மழை பொழிவால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பதிவு:

தென் மாவட்டங்களில் குறைந்தபட்சமாக 36 செ.மீ. மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 68 செ.மீ. மழை பெய்துள்ளது என தலைமை செயலாளர் தெரிவித்தார்.

3 மாவட்டங்களில் மீட்புப்பணிகள் தீவிரம்:

3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுவரை 7500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் மீட்புப்பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மீட்புப்பணிக்காக முப்படைகள் உதவி கோரப்பட்டுள்ளது:

மீட்புப்பணிக்காக முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ள பாதிப்பு இருப்பதால் ராணுவம், கடற்படை, விமானப்படை உதவி கோரப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்துள்ளதற்கு மேக வெடிப்பு காரணமல்ல, குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியே காரணம். வானிலை மையத்தின் எச்சரிக்கை அடிப்படையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் மழைநீர் வடிய தாமதம் ஏற்படலாம்:

நெல்லையில் விரைந்து தண்ணீர் வடிந்துவிடும்; தூத்துக்குடியில் சற்று தாமதம் ஏற்படலாம் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார்.

ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க நடவடிக்கை:

வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவு; ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க திட்டம்.. தலைமைச் செயலாளர் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : TOTHUKUDI ,HELICOPTER ,Chief Secretary ,Chennai ,Shivdas Meena ,Nella ,Tutickudi ,Tuthukudi ,Dinakaran ,
× RELATED தடையின்றி மின்சாரம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை